நிர்பயா கொலைக் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை ஒத்திவைப்பு- டெல்லி நீதிமன்றம் திடீர் உத்தரவு
01 Feb,2020
நிர்பயா கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றவாளிகள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்ட நிலையில் குறித்த மனுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான முடிவு தெரியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை ஏற்ற நீதிமன்றம் நாளை காலை அவர்கள் நான்கு பேருக்கும் நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதுடன் அடுத்த உத்தரவு வரும் வரை தண்டனையை நிறைவேற்றக் கூடாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013ஆம் ஆண்டு செப்ரெம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது.
குற்றவாளிகள் 4 பேருக்கும் பெப்ரவரி முதலதம் திகதி காலை 6 மணிக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் குற்றவாளி அக்சய் குமார் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சீராய்வு மனுதான் உச்ச நீதிமன்றத்தின் கடைசி சட்டக் கதவாகும். அது அக்சய் குமாருக்கு அடைக்கப்பட்டுவிட்டது. இனிமேல், அவர் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே கருணை மனு செய்ய வேண்டிய வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கெனவே முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா ஆகியோர் சீராய்வு மனுத் தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. வினய் குமாருக்கு அனைத்து விதமான சட்டக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இதில் 4ஆவது குற்றவாளியான பவன் குப்தா மட்டும் இன்னும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவில்லை.
அவர் சம்பவம் நடந்தபோது தான் சிறுவன் என்பதால் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து நாளை நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையிலே திடீர் திருப்பமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.