கொரோனா வைரஸ்: 'சீனாவில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது'
29 Jan,2020
புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் சீன அரசின் அதிகாரிகள் மற்றும் ஹூபேவில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியிருந்தார்.
சீனாவில் கொரோனா வைரஸ் - இதுவரை
கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனப் புத்தாண்டு விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதம் முதல் முறையாக இந்த வைரஸ் பரவத் தொடங்கியது. அந்த நகரத்தில் 11 மில்லியன் (1.1 கோடி) பேர் வசிக்கிறார்கள்.
போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதுடன் வுஹானில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐந்து லட்சம் சீன மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
சீன கொரோனாவைரஸ் குறித்து என்ன தெரியும்?
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.
2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஏழாகிறது.
இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.
சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.