வெளிநாட்டு வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு உத்தரவு
28 Jan,2020
கர்நாடகாவை சேர்ந்த ‘கிங்பிஷர்’ விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாததால் அவர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா லண்டனுக்கு குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்து வருகிறார்.
இந்திய அரசு விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா தற்போது ஜாமீனில் உள்ளார்.
லண்டனில் உள்ள ஐகோர்ட்டு விஜய் மல்லையாவுக்கு இந்தியாவின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கிடையே கத்தார் தேசிய வங்கி லண்டன் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. விஜய் மல்லையாவின் நிறுவனம் ‘கிஸ்மோ இன்வெஸ்ட்’.
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் நிறுவனமான ‘போர்ஸ் இந்தியா’ கத்தார் தேசிய வங்கியில் சுமார் ரூ.47.23 கோடி கடன் வாங்கியுள்ளது. அந்த கடனுக்கு பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உத்தரவாதமும் விஜய் மல்லையா அளித்துள்ளார்.
இந்த கடனில் தற்போது வட்டியுடன் போர்ஸ் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி இன்னும் தரவேண்டியுள்ளது. இந்த பாக்கி தொகைக்காக விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு சொந்தமான சொகுசு படகை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கத்தார் தேசிய வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி அந்த சொகுசு படகு ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு உள்ளது. அந்த படகின் மதிப்பை கணக்கிடவும், விற்பனை செய்யவும் ஒருவரை கோர்ட்டு நியமித்து இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
அந்த சொகுசு படகை விற்று அந்த பணத்தை கத்தார் தேசிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். படகை விற்று கிடைக்கும் பணத்துக்கு வேறு எந்த கடன் வழங்கியோரும் உரிமைகோர விரும்பினால் 6 முதல் 10 வாரங் களுக்குள் தங்கள் உரிமை கோரலை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.