உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் – ஐரோப்பிய ஒன்றியம்
27 Jan,2020
i
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 அமைப்புகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுநாள் (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 அமைப்புகள் 6 தீர்மானங்களை கொண்டுவந்துள்ளன.
இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமை குறித்த விதிகளுக்கும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையே 2005-ல் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை குறித்த ஒப்பந்தத்துக்கும் எதிராக இருப்பதாக தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உலக அளவில் அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என்றும் இது மிகப்பெரிய மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு எதிராக போராடுபவர்களை அழைத்து பேசாமல், பெரும்பாலான தலைவர்கள், அவர்களை மிரட்டுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் தேசியவாதம் என்ற இலக்கை நோக்கி செல்வதாகவும், ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது அரசியல் பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று, வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அது இந்திய அரசு, இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும் கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளவர்கள், அதை நிறைவேற்றுவதற்கு முன்பு முழு விவரங்களை தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது