சேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு!
24 Jan,2020
சேது சமுத்திர திட்டம் தொடர்பான நிலை குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேது கால்வாயை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என பா.ஜ.க ராஜ்யசபா உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், விரைந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலை குறித்து அறிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேது கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தினால் தென் தமிழகம் பொருளாதாரத்தில் மேம்படும். வங்காள விரிகுடாவில் இருந்து இந்திய பெருங்கடலை சுற்றி அரபிக் கடலுக்கு செல்லும் தற்போதைய கப்பல் போக்குரத்து நிலைமையும் மாறும். நேரடியாக வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக் கடலை சென்றடைய முடியும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த கால்வாய் இராமர் அமைத்த பாலம் என்பதால் அதை இடிக்க கூடாது எனவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து கூடாது எனவும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இதன்காரணமாக குறித்த கால்வாயை புராதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.