ஆளுநரின் மௌனம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி : வேல்முருகன்
23 Jan,2020
ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலுள்ள எழுவரையும் கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் இன்று வரை பதிலளிக்காமல் இருப்பது வெளிப்படையான அதிகார துஸ்பிரயோகம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி முதல் தற்காலிக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி ரவிசந்திரனை நேற்று (22) மாலை வேல்முருகன் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் அளிக்காது பல மாதங்களாக மௌனம் காப்பதானது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இரண்டாவது முறையாகவும் தமிழக சட்டமன்றத்தில் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு அனுப்பப்படும் தீர்மானத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிடின் உடனடியாக ஆளுநரை நீக்க சட்டமன்றம் மூலம், சட்டப்படி தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.