ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி உதவி: கோத்தபய ராஜபக்சேவிடம் அஜித் தோவல் உறுதி
20 Jan,2020
பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி வழங்கும் என்று கோத்தபய ராஜபக்சேவிடம் அஜித் தோவல் உறுதி அளித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கொழும்புக்கு சென்றார். அங்கு பல்வேறு வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்தார். பரஸ்பரம் நலன் சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை அஜித் தோவல் சந்தித்து பேசினார். இருவரும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், இருநாட்டு ஆயுதப்படையினர், கடலோர காவல் படையினர் ஆகியோருக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
தேச பாதுகாப்பு, உளவு தகவல் பரிமாற்றம், கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய பிரச்சினைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தனர்.
இந்த சந்திப்பின்போது, இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா 5 கோடி டாலர் (ரூ.360 கோடி) வழங்கும் என்று அஜித் தோவல் உறுதி அளித்தார்.
உளவு தகவல்களை சேகரிப்பது தொடர்பான தொழில்நுட்பத்தையும் அளிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இலங்கை, மாலத்தீவு, இந்தியா அடங்கிய கடல்சார் மண்டலம் தொடர்பான உளவு தகவல்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை அஜித் தோவல் எடுத்துரைத்தார்.
இந்த தகவல்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது பாதுகாப்பு திறனை மேம்படுத்த நிதிஉதவி அளிப்போம் என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜ் லவரோவ் கடந்த 14-ந் தேதி கூறியிருந்த நிலையில், இந்தியா இந்த உதவியை அறிவித்துள்ளது.