கோவை பெட்ரூம் சைக்கோ: அடுத்தவர் படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்
18 Jan,2020
கோயம்புத்தூரில் ஒரு வாலிபர் பல்வேறு வீடுகளின் சுவர் ஏறி குதித்து படுக்கையை அறையை எட்டிப்பார்ப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்துள்ளார். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இரவு 10.30 மணிக்கு வந்து, வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து படுக்கை அறை ஜன்னல் அருகே சென்று துணியை விலக்கி படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் வீடியோ காட்சி பதிவாகியிருந்தது.
இதனால் அதிர்ச்சியான அந்நபர் அக்கம்பக்கத்து வீடுகளிடமும் விசாரித்தார். அதில் மூன்று வீடுகளில் படுக்கை அறையை வாலிபர் ஒருவர் எட்டிப்பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது.
வாலிபரின் இரு சக்கர வாகன பதிவு எண்ணை வைத்து காவல்துறை இவரை தேடி வருகிறது. அந்த வாலிபர் படுக்கை அறைகளை எட்டிப்பார்க்கும் சைக்கோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக நாளிதழ் செய்தி கூறுகிறது.
: மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா கிடையாது, நீதிமன்றம் சொன்ன காரணம்
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என ஒரு பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மகாத்மா காந்தி இது போன்ற வழக்கமான அங்கீகாரங்களுக்கு அப்பாற்பட்டவர் என நீதிமன்றம் கூறிவிட்டது.
"ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் அவர் தேசத்தந்தையாக பதிவாகி இருக்கிறார்" என்று கூறிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.
- பள்ளிகளில் மராத்தி கட்டாயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் எந்த கல்வி முறையில் பயின்றாலும், அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டுவர அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து மாநில அதிகாரிகளிடம் அவர் கலந்தாலோசித்துள்ளார். மராத்தி கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியபோதும் பல பள்ளிகள் அதை பின்பற்றுவதில்லை. எனவே அதை சட்டமாக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட போர்டுகளில் படிப்பவர்களும் கண்டிப்பாக மராத்தி கற்க வேண்டும் என்கிறது சிவசேனை கூட்டணி அரசு.
பரோலில் தப்பிய 'டாக்டர் பாம்' சிக்கினார்
ராஜஸ்தான் ரயில் வெடிகுண்டு வெடிப்பு வழக்கின் ஆயுள் கைதியான ஐலீஸ் அன்சாரி மாயமானதை தொடர்ந்து, நேற்று அவர் கான்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பல வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியதில் பங்காற்றியதாக கூறப்படும் மற்றும் 1993 ராஜஸ்தான் வெடிகுண்டு சம்பவத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி. அஜ்மெர் சிறையில் அடைக்கப்பட்ட இவர், சமீபத்தில் பரோலில் வெளியே வந்தார். அவருக்கு வழங்கப்பட்ட 21 நாள் பரோல் காலம் முடியும் ஒரு நாள் முன்பு, அதாவது ஜனவரி 16ஆம் தேதி அவர் மும்பை வீட்டில் இருந்து மாயமானார்.
பரோலில் வந்த கைதி மாயமானதால் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் அவர் இருந்ததை கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.