போலி மேட்ரிமோனி மூலம் பண மோசடி.!
14 Jan,2020
சேலம் மாநகரில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உலவும் இளம் பெண்களின் புகைப்படங்களை சேகரித்து, மேட்ரிமோனியல் இணையதளம் உருவாக்கி, பெண் தேடுவோரிடம் பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனுக்கு பெண் பார்க்கும் பொருட்டு வாட்சப் மூலம் அறிமுகமான “லட்சுமி மேட்ரிமோனி” என்ற இணையத்தை அணுகியுள்ளார். அதில் தனது மகனுடைய விவரங்களையும் தொடர்பு எண்ணையும் பதிவு செய்த ஜெய்சங்கருக்கு உடனடியாக சில இளம் பெண்களின் புகைப்படங்கள் வாட்சப்பில் அனுப்பி வைக்கப்பட்டன.
அதிலிருந்த ஒரு பெண் ஜெய்சங்கர் கும்பத்தாருக்குப் பிடித்துப்போகவே, இணையத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டனர். பெண்ணின் விவரங்களைப் பெறவும் அவர்களின் குடும்பத்தாரோடு பேசவும் என 2 தவணைகளாக அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாயை செலுத்திய ஜெய்சங்கரிடம், பெண் வீட்டாரைப் போலவே சிலர் பேசினர்.
தங்களை பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய மேட்ரிமோனியல் தரப்பினரின் செல்போன் எண்கள், பணம் செலுத்திய பின்னர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டதாகவும் ஜெய்சங்கர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான் ஜெய்சங்கரின் மகன் எதேச்சையாக பேஸ்புக்கை பார்வையிட்ட போது, அதில் மேட்ரிமோனியில் தேர்வு செய்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்துள்ளார்.
பெயரோ, முகவரியோ இன்றி அந்தப் புகைப்படம், வெறும் லைக்குகளுக்காக பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஜெய்சங்கர், மீண்டும் லட்சுமி மேட்ரிமோனியல் இணையதள எண்ணுக்குத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெய்சங்கர், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இவர்களைப் போன்றோரின் ஏமாற்றங்கள் ஒருபுறம் இருக்க, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் தங்களின் புகைப்படங்களைப் பகிரும் இளம் பெண்கள்தான் இதில் அதிகமான பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்கின்றனர் போலீசார்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் சேலை உடுத்தி போஸ் கொடுத்து அதனை சமூக வலைதளங்களில் பெருமையோடு பதிவேற்றும் கல்லூரிப் பெண்களின் புகைப்படங்கள் அதிக அளவில் இதுபோன்ற கும்பல்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
அந்தப் பெண்கள் திருமணமாகி செல்லும் நிலையிலும் அவர்களின் புகைப்படங்கள் மட்டும் இதுபோன்ற போலி மேட்ரிமோனியல் தளங்களில் பல ஆண்டுகளுக்கு உலவிக் கொண்டிருக்கும். அது ஏதோ ஒரு தருணத்தில் அந்தப் பெண்களின் வாழ்வில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என்றும் போலீசார் எச்சரிக்கின்றனர்.