கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் - நடந்தது என்ன?
10 Jan,2020
கன்னியாகுமரியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.
நேற்று இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை நோக்கி நான்கு முறை சுட்டுவிட்டு தப்பியோடினர்.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.பின்னர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட நபர்கள், அருகிலுள்ள பள்ளிவாசல் வழியாக தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.ஐ வில்சனை சுட்டுக் கொன்ற கொலையாளிகளில் இரண்டு பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் செய்யது அலி நவாஸ் மற்றும் அப்துல் ஷமீம் என்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்தவர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியிட்டனர்.
அவர்களைப் பிடிக்க போலீசார் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான களியக்காவிளை சோதனை சாவடிக்கு சென்று, தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ஆய்வு நடத்தினார்.
தென் மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். முன்னதாக, திருவனந்தபுரம் அருகே சங்குமுகத்தில் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவையும், தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி சந்தித்து பேசினார். அப்போது இருமாநில எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.இதனிடையே சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த வில்சன் உடல் அவரது சொந்த ஊரான மார்தாண்டத்தில் 21 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகிய இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பதில் கிடைக்கவில்லை.