இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குகிறது கேரள அரசு
                  
                     29 Dec,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	
	 
	
	இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக, தவறாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
	திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் நம்பி நாராயணன் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார்.
	இவர், இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாகவும், 1994ல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், விஞ்ஞானி நம்பிநாராயணனை கைது செய்து, கேரள போலீசார் சிறையில் அடைத்தனர். இவர், இரண்டுமாதங்கள், சிறையில் இருந்தார். இதற்கிடையே, இந்த வழக்கு, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
	நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என, சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்தது. தன்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்கு, கேரள அரசு, இழப்பீடு தர வேண்டும் என, கேரளநீதிமன்றத்தில், நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார்.
	இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரள அமைச்சரவை கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.