இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது : பாஜக மூத்த தலைவர்
25 Dec,2019
இந்தியாவில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை தமிழர்கள் இந்திய குடியுரிமை கேட்கக்கூடாது. அவர்கள் இலங்கைக்கு திரும்பி தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இதன் போது செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி காலத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் நள்ளிரவில் அவசர சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அது தான் ஜனநாயகப் படுகொலை. அதை செய்யாமல் வெளிப்படையாக தெரிவித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அந்த விவாதத்தில் அனைத்துக்கட்சிகளை பேச அனுமதித்து சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இப்போது குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. குடியுரிமை சட்டம் குறித்து பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை போராட்டத்துக்கு எதிர்கட்சிகள் தூண்டுகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சட்டத்தில் எதும் சொல்லப்படவில்லை என்கின்றனர். இலங்கை தமிழர்களை பொருத்தவரை குடியுரிமை கேட்டால் வழங்கலாம். ஆனால் அவர்கள் குடியுரிமை கேட்கக்கூடாது. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு திரும்பி தங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
இலங்கை தமிழர்கள் தலைவர்கள் பலர் என்னை சந்தித்துள்ளனர். அவர்கள் யாரும் தங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை. இலங்கைக்கு திரும்பி செல்ல தயாராக உள்ளோம். இலங்கை செல்வதற்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் போதும் என்றே அவர்கள் கேட்கின்றனர். இது தொடர்பாக பிரதமரிடம் பேசியுள்ளேன். என அவர் தெரிவித்துள்ளார்.