இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு: மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்
24 Dec,2019
இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய மக்களின் மனநிலை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்தியா முழுவதும் ஆய்வு நடத்தியது. அதில், இந்திய மக்களின் மனநிலை பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
மனநிலை பாதிப்பை பல்வேறு வகையாக பிரித்துள்ளனர். மன அழுத்தம், பதற்றத்தால் ஏற்படும் படபடப்பு, மனச்சிதைவு, இருவிதமான எண்ணங்கள், அறிவுத்திறன் பாதிப்பு, மனநிலை வேறுபாடு, ஆட்டிசம் போன்றவை மனநிலை பாதிப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 7 பேரில் ஒருவர் இதில் ஏதாவது ஒரு பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மொத்தத்தில் இந்திய மக்களில் 19 கோடியே 70 லட்சம் பேருக்கு பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 1990-ம் ஆண்டை ஒப்பிடும் போது இது 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் 4 கோடியே 57 லட்சம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 கோடியே 49 லட்சம் பேர் படபடப்புக்கு ஆளாகி உள்ளனர்.