டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த நான்காவது மற்றும் கடைசி மறு ஆய்வு மனுவை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர்களது தண்டனை நிறைவேற்றப்படும் காலம் நெருங்கி வருகிறது.
"குற்றவாளி அக்ஷய் குமாரின் மறுஆய்வு மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்" என்று நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த வழக்கில் அக்ஷய், பவன், வினய், முகேஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளும் மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது, இரண்டாவது குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிப்பதுதான்.
மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு சட்டரீதியாக எவ்வித காலக்கெடுவும் இல்லை என்றாலும், விரைவில் மனுத்தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகள் தரப்புக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்?
மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் காலம் நெருங்கிவிட்டதாக மூத்த சட்ட வல்லுநர்களும், மூத்த வழக்கறிஞர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். நிர்பயா சம்பவம், கொடூரமான முறையில் செய்யப்பட்டு அது நாட்டையே உலுக்கியது என்பதால், தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்புவதற்கு இருக்கும் மறுசீராய்வு மனு, கருணை மனு ஆகிய இரண்டு சட்டரீதியிலான வாய்ப்புகளும் நிராகரிக்கப்படும் என்றே கருதப்படுகிறது.
இதுகுறித்த பிபிசியிடம் பேசிய முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மோகன் பராசரன், நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு அடுத்த 3-4 மாதங்களில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறுகிறார்.
"தூக்குத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம். ஏனெனில், குற்றவாளிகளின் மறுஆய்வு மனு ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டது. மேலும், மீதமுள்ள மறுசீராய்வு மனு, கருணை மனு ஆகிய இரண்டுமே வழக்கின் தீவிரத்தை கருத்திற்கொண்டு ஏற்றுக்கொள்ளப்படாது என்றே கருதப்படுகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞருமான கே.சி. கௌசிக், "இந்த வழக்கு மிகவும் அரிதான வழக்குகளில் ஒன்றாக இருக்கிறது. எனினும், அடுத்த ஒருசில மாதங்களில் குற்றவாளிகளுக்கு உள்ள இரண்டு வழிகளும் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும்" என்று கூறுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், சட்டரீதியான நடைமுறைக்கு தேவைப்படும் 2-3 மாதங்களுக்கு மேல் குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற காலதாமதம் செய்யக்கூடாது என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்த வழக்கு விரைவில் ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு வர வேண்டும் என்று கருதுகிறார் குற்றவியல் வழக்கறிஞரான விகாஸ் பஹ்வா.
"அடுத்த 2-3 மாதங்களில் குற்றவாளிகளுக்கு முன்பு உள்ள அனைத்து சட்டரீதியிலான வாய்ப்புகளும் நிறைவடைந்த பிறகு, அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும்," என்று பிபிசியிடம் பஹ்வா கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட ராம் சிங்
நிர்பயா வழக்கின் நான்கில் மூன்று குற்றவாளிகளின் வழக்கறிஞரான ஏ.பி. சிங், குற்றவாளிகள் அனைவருக்கும் குறைந்தபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் குற்றவாளிகள் தங்களை தாங்களே சீர்த்திருத்தம் செய்துக்கொள்வதற்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
"எனது தரப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் ஏழைகள். தாங்களும் இந்த நாட்டின் நல்ல குடிமகன்கள் என்பதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று சிங் பிபிசியிடம் கூறினார்.
இந்த வழக்கில் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நான்கு குற்றவாளிகளை தவிர்த்து மற்றொரு முக்கிய குற்றவாளியான ராம் சிங், இந்த வழக்கு தொடர்பான தொடக்க கட்ட விசாரணை நடக்கும்போதே தற்கொலை செய்துகொண்டார்.
சிறார் குற்றவாளியின் நிலை என்ன?
நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் குற்றவாளி கடந்த 2015ஆம் ஆண்டே சீர்த்திருத்த பள்ளியிலிருந்து தண்டனை காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.
அந்த குற்றவாளியின் விடுதலையை தடுக்கும் அனைத்து சட்டரீதியிலான முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.
நிர்பயா சம்பவம் நடந்தேறியபோது, 18 வயதுக்கும் குறைவான வயதே ஆகிருந்த அந்த குற்றவாளி, அதிகபட்சமாக மூன்றாண்டுகள் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது அந்த குற்றவாளி 18 வயதை கடந்துவிட்டாலும், சட்டப்படி சிறுவராக கருதப்பட்ட காலத்தில் செய்த தவறுக்கு, அப்போதே உரிய தண்டனை விதிக்கப்பட்டு அதை நிறைவு செய்தாகிவிட்டது.
பாதுகாப்பு சார்ந்த அச்சங்களின் காரணமாக, அந்த குற்றவாளி தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை
2012 டிசம்பர் 16: டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.
2012 டிசம்பர் 17: முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
2012 டிசம்பர் 29: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா உயிரிழந்தார்.
2013 மார்ச் 11: முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2013 ஆகஸ்டு 31: வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
2013 செப்டம்பர் 13: இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2014 மார்ச் 13: நால்வரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2014 மே-ஜூன்: குற்றம் சாட்டப்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ததால், அதை பரிசீலித்து தீர்ப்பு வழங்கும்வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
2017 மே: டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.