பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் பல கோடிக்கு சொத்துகள் வாங்கிய சசிகலா’
22 Dec,2019
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் நடந்த விசாரணையில், பினாமி பெயரில் சுமார் ரூ.1,500 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த சொத்துகளைக் கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் சசிகலா ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கு அடிப்படையில் வருமான வரியை மதிப்பீடு செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை மேற்கொண்டது.
இந்த நிலையில் வருமான வரித்துறை விசாரணை நடத்திய கிருஷ்ணப்பிரியா (சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள்), செந்தில் (சசிகலாவின் வழக்குரைஞர்) உள்ளிட்டோரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வருமான வரித்துறை தரப்பில் கூறியதாவது, “கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி கிருஷ்ணப்பிரியா வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிருஷ்ணப்பிரியாவின் கைப்பேசியில் படமாக இருந்த 2 துண்டு சீட்டுகளில் முன்னணி நிறுவனங்கள் குறித்தும், வரவு, செலவு செய்தது போன்ற குறிப்பும் இருந்தது. அந்த துண்டு சீட்டை எழுதியது யார்? என விசாரித்தபோது சசிகலாவின் வழக்குரைஞர் செந்தில் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், துண்டு சீட்டில் எழுதி இருக்கும் தகவல் சசிகலா வாங்கிய பல்வேறு சொத்துகள் சம்பந்தமானது என்றும், மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த சமயத்தில் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது எனப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது இந்த வரவு, செலவு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சென்னை பெரம்பூர், மதுரை கே.கே.நகர் ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகம், புதுச்சேரியில் உள்ள கேளிக்கை விடுதி (ரிசார்ட்), கோவையில் பேப்பர் மில் மற்றும் காற்றாலைகள், சென்னை அருகே ஒரகடத்தில் சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் ரோட்டில் மென்பொருள் கம்பெனி ஆகியவற்றை வாங்கிய போது சட்ட கருத்துரு வழங்கியதாகவும் அவர் கூறினார்.
துண்டு சீட்டில் உள்ள தகவலை சசிகலா சொல்ல சொல்ல, தான் எழுதியதாகவும், அதன்பின்பு, அந்த துண்டு சீட்டை ஒரு கவரில் வைத்து மூடி பத்திரமாக வைக்கும்படி சசிகலா தன்னிடம் கூறியதாகவும் செந்தில் தெரிவித்தார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பரோலில் வந்த போது கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியிருந்தார்.
அந்த சமயத்தில், சசிகலா கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த துண்டு சீட்டு கவரை அவரிடம் ஒப்படைத்தேன் என்றும் கூறி உள்ளார்.
கிருஷ்ணப்பிரியா வீட்டில் வைத்து இந்த துண்டு சீட்டை சசிகலா பார்த்துவிட்டு, அதைக் கிழித்து போடும்படி கிருஷ்ணப்பிரியாவிடம் கூறி உள்ளார். அந்த துண்டு சீட்டை கிழிப்பதற்கு முன்பு தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.
2012-2013 முதல் 2016-2017-ம் ஆண்டு வரை சசிகலாவுக்கு பல்வேறு நிறுவனங்களில் பங்கு இருந்தது தொடர்பான குற்றச்சாட்டும், 2017-18-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டும் சசிகலா மீது உள்ளது.
வருமான வரி மதிப்பீடு தொடர்பான விசாரணை முடிவடைந்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான விவரம் வருமான வரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.” – இவ்வாறு வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது