சேலம் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ஆதரவு தெரிவித்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதுடன் குழப்பங்களும் நிலவுகிறதே. அதன் நிலைப்பாடு என்ன?
பதில்:- குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பிரதமரும், உள்துறை மந்திரியும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வாழ்கின்ற யாருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, எவருக்கும் பாதிப்பு இல்லை என்று விளக்கமாக அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்திலேயே 2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்த பிறகு அவர் பிரதமரை சந்தித்த போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தார். அவர் மறைவிற்கு பிறகு நானும் பிரதமரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனுவும் கொடுத்தேன்.
தற்போது நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகப்படுத்திய போது அ.தி.மு.க. சார்பாக பேசிய மாநிலங்களவை உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பொய்யான செய்தியை தமிழகத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நேற்று (நேற்று முன்தினம்) காஞ்சீபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். ஏதோ அ.தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டது போல ஒரு குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். இது அத்தனையும் முழு பொய். தி.மு.க. கடந்த 2009-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த காலத்தில் இலங்கையில் போர் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த போரை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதை ஒரு மணி நேரத்தில் முடித்துக்கொண்டு பேசும்போது, இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது, யாரும் அச்சப்பட தேவையில்லை என்ற ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டார்.
இந்த செய்தியை நம்பி இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்தபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து சுமார் 1ண லட்சம் தமிழர்களை கொன்று குவித்தார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்வது போல நாடகமாடி கொண்டிருக்கிற ஒரே கட்சி தி.மு.க. தான். 1ண லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போது இலங்கை அரசை கண்டித்து ஏதாவது போராட்டம் நடத்தினார்களா?, அல்லது அப்போதைய மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுத்தார்களா?.
இவர்கள் தானே மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் அங்கம்வகித்தார்கள். அப்போது எல்லாம் மவுனம் சாதித்துவிட்டு எந்த போராட்டமும் செய்யாமல் இருந்தார்கள். பதவியை தானே பெரிதாக கருதினார்கள். 13 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏன் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்று தரவில்லை?.
நாங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்திருக்கிறோம்.
இலங்கை தமிழர்களை பற்றி பேசுவதற்கு தி.மு.க.வினருக்கு எந்த அருகதையும் கிடையாது, தகுதியும் கிடையாது. சொந்த நாட்டிலேயே இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த காட்சிகளை நாம் பார்த்தோம். ஆனால், எம்.பி.க்களான கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் ராஜபக்சேவை சந்தித்து, அவர் அளித்த விருந்தில் கலந்துகொண்டு, அவர் கொடுத்த பரிசு பொருட்கள் வாங்கியவர்களை கொண்டுள்ள கட்சி தி.மு.க. தான். அப்படிப்பட்டவர்கள் தான் இலங்கை தமிழர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய தந்தை கருணாநிதி மற்றும் அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் தான்.
கேள்வி:- இரட்டை குடியுரிமை கேட்டு ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தியும் கொடுக்கவில்லை. இதற்கு தமிழக அரசின் மேல் நடவடிக்கை என்ன?
பதில்:- இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள நம்முடைய தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதற்கு அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும். அதற்குண்டான நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, தமிழக மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படுகின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளும் இலங்கை தமிழர்களுக்கும் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 107 முகாம்கள் உள்ளன. அதில் ஏறக்குறைய 25 மாவட்டங்களில் 59,714 இலங்கை தமிழ் மக்கள் வசிக்கின்றனர். மேலும் 34,355 பேர் வெளியில் வசிக்கின்றார்கள். தமிழக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் அவர்களுக்கும் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மாதந்தோறும் 20 கிலோ அரிசியும் விலையில்லாமல் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.விற்கு தேர்தலை சந்திக்க ‘தில்’ இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என்று பலமுறை கேட்டுள்ளார். தற்போது நாங்கள் கேட்கிறோம், தேர்தலை சந்திக்க தி.மு.க.விற்கு தில் இருக்கிறதா, திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா?. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைத்து கொண்டிருக்கிறது என்று சொன்ன தி.மு.க. தற்போது தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தவுடன் நீங்கள் ஏன் தடையாக இருக்கின்றீர்கள்?.
மக்களை சந்திக்க வேண்டியது தானே. ஜனநாயக முறைப்படி தானே தேர்தல் நடக்கிறது. பிறகு தேர்தலை சந்திக்க ஏன் தயங்குகிறீர்கள்?. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க, மக்களை சந்திக்க தயாராக உள்ளன. மிகப்பெரிய வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.