நித்யானந்தா ஆசிரமத்தில் தொடரும் மர்மம் – அடுத்த வழக்கு சென்னையில்
18 Dec,2019
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த தனது மைத்துனரை 5 மாதங்களாகப் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் அவரை மீட்டுத்தருமாறு கோரியும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் என்பவர் இன்று (புதன்கிழமை) இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நித்யானந்தாவும் பிரச்சினைகளும் சேர்ந்தே எப்போதும் பயணிக்கும். இதில் நித்யானந்த ஆசிரமம் அமைந்துள்ள பிடதியிலும் இன்னும் சில இடங்களிலும் தங்கள் பிள்ளைகள் அடைத்து வைக்கப்படுவதாக பொலிஸிலும் நீதிமன்றத்திலும் பல முறைப்பாடுகள் உள்ளன.
சமீபத்தில்கூட அஹமதாபாத் ஆசிரமத்தில் குழந்தைகளை அடைத்து வைத்ததாக அம்மாநில பொலிஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் 15 ஆண்டுகளாக இருந்த தனது மைத்துனரைக் காணவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் என்பவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இவர், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்த தனது மைத்துனர் பிராணாசாமியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியுள்ளார்.
அவரது மனுவில், “கடந்த 15 வருடங்களாக நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த மைத்துனரைப் பார்த்து வந்த நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு அவரை பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கவில்லை.
அவர் என்ன ஆனார்? ஏன் பேச அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை. நித்யானந்தாவின் சட்டவிரோதக் காவலிலிருந்து எனது மைத்துனரை மீட்டு ஒப்படைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.