பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு..! முதலமைச்சர் அதிரடி
12 Dec,2019
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துவருவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, அடுத்த 2 வாரங்களுக்குள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கும் வகையில் (மொத்தம் 21 நாட்களுக்குள்) புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், “நிர்பயா பெயரில் சட்டம் இயற்றியுள்ளோம். ஆனால், நிர்பயா கொல்லப்பட்டு 7 வருடங்கள் ஆகிவிட்டன.
இன்றுவரை அந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடவில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிப்பதே சமூகத்துக்கு நல்லது.
`இரு மகள்களின் தகப்பனாக பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையளித்தது. குற்றவாளிகளுக்கு எத்தகைய தண்டனை அளித்தாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதலைத் தராது.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை விரைவில் வழங்க வேண்டும். மருத்துவர் பிரியங்கா கொலையாளிகளை என்கவுன்டர் செய்ததற்காக, சந்திரசேகர ராவ் அரசுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆந்திர மக்கள் மட்டுமின்றி நாடுமுழுவதிலிமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.