அடைக்கலம் கோரிய நித்யானந்தாவின் கோரிக்கையை ஈக்வடார் நிராகரித்தது ; ஹைதிக்கு தப்பி ஓட்டம்
06 Dec,2019
அடைக்கலம் கோரிய நித்யானந்தாவின் கோரிக்கையை ஈக்வடார் நிராகரித்து உள்ளது. இதனால் அவர் ஹைதிக்குச் செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.
நாளொரு சர்ச்சையும் பொழுதொரு செய்தியாகவும் பேசப்பட்டு வரும் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.
ஆனால் நித்யானந்தாவின் அடைக்கலம் கோரிக்கையை மறுத்துவிட்டதாக ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் "மறைமுகமாக ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் ஒரு அறிக்கையில் நித்யானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு (அடைக்கலம்) கோரிக்கையை ஈக்வடார் அரசு மறுத்து உள்ளது. நித்யானந்தாவுக்கு "ஈக்வடார் தஞ்சம் வழங்கியது அல்லது ஈக்வடார் அருகே உள்ள எந்தவொரு நிலத்தையும் தீவையும் வாங்குவதற்கு ஈக்வடார் அரசாங்கம் உதவி செய்துள்ளது" என்ற செய்திகள் "திட்டவட்டமாக" மறுக்கப்பட்டு உள்ளது.