நித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ - கொடி, துறைகளும் அறிவிப்பு
04 Dec,2019
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்.
நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும் இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய நித்தியானந்தா தலைமறைவாக இருப்பது ஏன்?
நித்தியானந்தா விவகாரம் - மதுரை ஆதீனம் பேட்டி
தங்கள் நாட்டைப் பற்றிய குறிப்பு என்ற இடத்திலோ 100 மில்லியன் ஆதி சைவர்கள், 2 பில்லியன் இந்துக்கள் தங்கள் மக்கள் தொகை என்றும், ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை தங்கள் நாட்டின் மொழிகள் என்றும், சனாதன இந்து தர்மமே தங்கள் மதம் என்றும், தெற்காசியாவில் உள்ள 56 வேதாந்த தேசங்களை சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் இனக்குழுவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நித்தியானந்தர் அமர்ந்த நிலையில் இருக்க, அருகே நத்தி இடம் பெற்றிருக்கிற ரிஷபக் கொடியே தங்கள் கொடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, கல்வி, கருவூலம், வணிகம், வீட்டுவசதி என்பது உள்ளிட்ட துறைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இணைப்புப் பக்கங்களில் பல பதவிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.
ஒவ்வொரு துறைக்கான பக்கத்திலும் அத்துறையில் பணியாற்ற விண்ணப்பிப்பதற்கு ஒரு இணைப்பும் தரப்பட்டுள்ளது.
யார் இந்த நித்யானந்தா?
தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூர் அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.
பிறந்த ஊரான திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது. இவருக்கு எதிராக பாலியல் புகார்களும் விசாரிக்கப்படுகின்றன.
பார்த்து 22 மாதமாகிறது
நித்தியானந்தாவின் சீடராக நீண்ட நாள்கள் இருப்பவரும், அவருடை சொந்த ஊரான திருவண்ணாமலையை சேர்ந்தவருமான நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு இந்த புது நாடு குறித்து கேட்டது பிபிசி தமிழ்.
தமது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு அவர் பேசினார்.
"இந்துக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. இதெல்லாம் அவர் சத் சங்கம் மூலம் முன்பே அறிவித்தவைதான். இந்தக் கொடி, இலச்சினை எல்லாமும் கூட அவர் முன்பே அறிவித்தவைதான். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் தப்பித்து வெளிநாடு சென்றுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஒருவேளை அவர் இந்தியாவிலேயே கூட இருக்கலாம். அவரது காணொளிகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. அரசாங்கம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவேண்டியதுதானே" என்றார் அவர்.
"அவரை நான் சந்தித்து 22 மாதங்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது" என்றும் அவர் கூறினார்.