ஏமனில் கொத்தடிமைகளாக இருந்த மீனவர்கள்ஸதப்பித்து தாயகம் திரும்புகின்றனர்!
30 Nov,2019
ஏமன் நாட்டில் கொத்தடிமைகளாக இருந்து, 10 நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பிய தமிழக, கேரள மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளது. மீனவர்கள் நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளதால் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், நெல்லையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என ஒன்பது மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீன்பிடி தொழிலுக்காக ஏமன் நாட்டுக்குச் சென்றனர்.
அங்கு சுல்தான் என்பவரிடம் மீன்பிடிக்கும் வேலைக்காக அமர்த்தப்பட்டனர். சுல்தான் அவர்களுக்கு சரிவர உணவு வழங்காமலும் சம்பளமும் கொடுக்காமலும் கடுமையாக வேலை வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுல்தானிடம் இருந்து தப்பிக்க எண்ணிய மீனவர்கள் 9 பேரும் கடந்த 19ஆம் தேதி வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறி கடலுக்குள் சென்றவர்கள், அங்கிருந்து தப்பியுள்ளனர்.
முன்னதாக தாங்கள் ஏமனிலிருந்து தப்பி வரும் விஷயத்தை குடும்பத்தாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர்களது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், 27ஆம் தேதி இந்திய எல்லையை நெருங்கிவிட்டதாக அவர்களிடமிருந்து குடும்பத்தாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
போதிய உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் தங்களை மீட்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மீனவர்களின் குடும்பத்தினர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் விமானம் மூலம் தேடுதல் பணியில் இறங்கினர். அதன் பயனாக மீனவர்கள் 9 பேரும் கல்பெனித் தீவு அருகே இருப்பதை தெரியவந்தது. கொச்சி துறைமுகத்திலிருந்து 218 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவிலிருந்து மீனவர்களை அழைத்து வர கப்பல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மீனவர்கள் நலமுடன் இருப்பதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 10 நாட்களாக சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து வந்திருக்கும் அவர்களை கைது செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள அவர்கள், இவர்களைப் போலவே வெளிநாடுகளுக்கு மீன்பிடிக்கச் சென்று கொத்தடிமைகளாக இருக்கும் மீனவர்களை கண்டறிந்து மீட்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.