டிஜிற்றல் இந்தியாவில் நள்ளிரவில் வீடு புகுந்து பைக் திருடும் பொலிஸ்..!
24 Nov,2019
பெங்களூரில் வாகனத்தை காணவில்லை என்று புகார் ஆளிக்க வருபவர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக போலீசாரே வீடு புகுந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பகலில் வாகன சோதனையில் வசூல் மன்னர்களாக திகழும் போலீசார் இரவில் வாகன கொள்ளையர்களாக வலம் வந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலிப்பதற்கு என்றே வாகனத்தை மறித்து டார்ச்சர் செய்யும் நம்ம ஊரில் உள்ள சில வசூல் போலீசாருக்கே சவால் விடும் வகையில் பெங்களூரு போலீசார் செய்த திருட்டு வேலை ஒன்று அம்பலமாகியுள்ளது..!
பெங்களூர் சுப்ரமணிய நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு இரண்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு போலீசாரும் ஒரே பைக்கில் வந்த நிலையில், ஒரு போலீஸ்காரர் மட்டும் வீட்டுகாம்பவுண்டுக்குள் நுழைந்து வீட்டு உரிமையாளர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு காம்பவுண்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கை நைசாக திருடிக்கொண்டு வெளியே வந்தார் திருட்டு போலீஸ்காரர்.
பின்னர் இரு போலீசாரும் ஆளுக்கு ஒரு பைக்கில் செல்வது அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையே இதுபோன்ற திருட்டுக்களில் ஈடுபடலாமா என்று பெங்களூரில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
சுப்ரமணிய நகர் பகுதியில் அதிகளவில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போவதால் சைடு லாக் பூட்டப்படாமல் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகளை போலீசார் எடுத்து சென்று விடுவதும், வண்டி உரிமையாளர்கள் தேடி வந்து கேட்டால் அபராதம் என்ற பெயரில் ரசீது ஏதும் கொடுக்காமல் 300 ரூபாய் வசூலித்துக் கொள்வதும் வழக்கம் என்று கூறப்படுகின்றது.
அதுவும் போக்குவரத்து காவல்துறையினர் தான் வண்டிகளை எடுத்து செல்ல வேண்டும் என்ற விதி இருக்க, சட்டம் ஒழுங்கு போலீசாரே திருடன் போல வீட்டுக் காம்பவுண்டுக்குள் சென்று வண்டியை எடுத்துச் சென்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இருந்தாலும் பகல் பணிக்கு வரும் போலீசாருக்கு வசூலுக்கு வழி செய்து விட்டு செல்வதால் பெங்களூர் போலீசார் வசூல் ராஜாக்களாகவே வலம் வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்