மாதந்தோரும் வங்கி கணக்கில் பணம்ஸ பிரதமர் போடுவதாக செலவழித்த நபர்..!
24 Nov,2019
இரு வாடிக்கையாளருக்கு ஒரே வங்கி கணக்கு எண் வழங்கிய அதிகாரியின் குளறுபடியால் ஒரு வாடிக்கையாளருக்கு மாதந்தோறும் சென்ற பணத்தை எடுத்து ஆடம்பரமாக செலவழித்து வந்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டம் ஆலம்பூரில் ஸ்டேட் பாங்க் கிளை உள்ளது. இங்கு ரூராய் மற்றும் ரோனி கிராமங்களைச்சேர்ந்த இருவர் தனித்தனியே கணக்கு தொடங்கியுள்ளனர். இருவரது பெயரும் ஹுகும் சிங் என்பதால் ஒரே நபர் என கருதிய வங்கி மேலாளர் ஒரே வங்கி கணக்கு எண் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ரூராய் கிராமத்தைச்சேர்ந்த ஹூகும் சிங் அரியானா மாநிலத்துக்கு வேலைக்கு சென்று, மாத ஊதியத்தை வங்கி கணக்கில் போட்டு வந்துள்ளார்.
அந்தப்பணம் ரோனி கிராமத்தைச்சேர்ந்த ஹூகும் சிங் கணக்குக்கு மாதந்தோறும் சென்றுள்ளது. அவர் கடந்த 6 மாதத்தில் 89 ஆயிரம் ரூபாயை எடுத்து செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் அரியானாவில் பணிபுரிந்த ஹூகும் சிங் தனது வங்கி கணக்கை சரி பார்த்தபோது, மொத்தப்பணம் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு பதில், வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளருடன் தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார். அதன்பின்பே ஒரே எண்ணில் இருவருக்கு வங்கி கணக்கு இருப்பது தெரிய வந்தது.
தவறை உணர்ந்த வங்கி அதிகாரிகள் ரோனி கிராமத்தை சேர்ந்த ஹுகும் சிங்கிடம் விசாரித்த போது, பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழித்து, அதை தனது கணக்கில் மாதந்தோறும் போடுவதாக நினைத்ததாக அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகளோ இதற்கு எப்படி தீர்வு காண்பது, யாரிடம் பணத்தை வசூலிப்பது என குழப்பம் அடைந்து உள்ளனர்.