பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி!
22 Nov,2019
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 255 கோடி ரூபாய் கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலங்கள் அவையில் கேள்வியெழுப்பப்பட்ட நிலையில் மேற்படி பதில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் முரளிதரன், கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த தனி விமானங்களுக்கு மத்திய அரசு 255 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.
தற்போதைய நிதியாண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனி விமானங்களுக்கான கட்டணங்களுக்கு இதுவரை ரசீது பெறப்படவில்லை. எனவே நடப்பு நிதியாண்டில் எவ்வளவு செலவானது என்ற தொகை தெரியவில்லை.
பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் உள்நாட்டு பயணங்களுக்கு பிரதமர் மோடி இராணுவத்தின் ஹெலிகொப்டரை பயன்படுத்துகிறார்.
உள்நாட்டு பயணங்கள் அரசு முறை பயணமாக அமைவதால் அதற்கு கட்டணங்கள் செலுத்தப்படுவது இல்லை. எனவே உள்நாட்டு பயணங்கள் அனைத்தும் பிரதமருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.