விரைவில் சட்டவிரோத குடியேறிகள் குறித்த விசாரணை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
21 Nov,2019
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த, ஊடுருவிய பங்களாதேஷ் மக்கள், ரோஹிங்கியா இனத்தவர் உள்ளிட்டோரை நாடு கடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவித்தலை உச்சநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.
பாஜக நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், ‘மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக ரோஹிங்கியா மக்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பேனேபோல்-ஹரிதாஸ்பூர், ஹில்லி ஆகிய பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.
இதுமட்டுமல்லாமல் திரிபுராவின் சோனாமோரா, கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய பகுதிகள் வழியாகவும் பங்களாதேஷ் மக்களும் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளார்கள்.
இவர்கள் இந்தியர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து, வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் எல்லையோர மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக மட்டுமல்லாமல், தேச ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசத்தினர் மட்டும் சட்டவிரோதமாக 40 ஆயிரம் பேர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக குடியேறியுள்ள, ஊடுருவியுள்ள இவர்களை அடையாளம் கண்டு கைது செய்து மாநில அரசுகளும், மத்திய அரசும் நாடு கடத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது