பசியோடு காத்திருந்த சிறுமி; படம் பிடித்த புகைப்படக்காரர் – சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய போட்டோ
10 Nov,2019
கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இலவசக் கல்வி, மதிய உணவுத் திட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் எத்தனையோ குடும்பங்கள் அரசுப் பள்ளிகளை நம்பி தான் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் கொடுக்கும் மதிய உணவுக்காக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
பிளாட் பாரங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் வசிக்கும் எத்தனையோ குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதே சவாலானது தான். தெலங்கானா மாநிலத்தில், குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி, கைகளில் தட்டுடன் ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலில் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது.
தெலுங்கு தினசரி பத்திரிகையில் பணிபுரியும் புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் அது. அது, பல கதைகளைப் பேசியது.
ஹைதராபாத்தின் Mehdipatnam பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில், டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் செய்தி சேகரிக்க அந்தப் புகைப்படக்காரர் விரைந்துள்ளார்.
அப்போது தான் சிறுமி அங்கு வந்துள்ளார். உடனடியாக அந்தச் சிறுமியைப் புகைப்படம் எடுத்துள்ளார். மதிய உணவு சாப்பிட வந்ததாகச் சிறுமி கூறியுள்ளார்.
அவர் பெயர் திவ்யா. பள்ளி வேலை நாள்களில், ஒரு மணியளவில் கைகளில் தட்டுடன் அந்தச் சிறுமி அங்கு வந்துவிடுவார். மதிய உணவு திட்டத்தின் கீழ் அந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும். குழந்தைகள் யாராவது வரவில்லை என்றால், அவர்களின் உணவு திவ்யாவுக்குக் கிடைக்கும்.
சிறுமி வசிக்கும் குடிசைப் பகுதிக்கு அருகில்தான் இந்தப் பள்ளி இருக்கிறது. சிறுமியின் பெற்றோர் யசோதா-லட்சுமணன் இருவரும் குப்பைகளில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
பசியோடு நாள்களைக் கழிக்கும் அந்தச் சிறுமிக்கு, இங்கு வந்தால்தான் நல்ல உணவு கிடைக்கும் என்பது மட்டுமே தெரிந்திருந்தது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஒரு தன்னார்வ அமைப்பு, திவ்யாவைத் தேடி அப்பகுதிக்கு விரைந்து வந்து, சிறுமியின் பெற்றோரிடம் பேசுகையில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் என்றும் திவ்யா இளைய மகள் என்றும், மூத்த மகள் விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்துவருவதாகவும் தெரியவந்தது.
திவ்யாவை இந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர். சிறுமிக்கு 5 வயது நிறைவடையாததால் பள்ளியில் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அடுத்த வருடம் பள்ளியில் சேர்ந்து விடலாம் என பெற்றோர்கள் காத்திருந்தனர்.
இந்தப் புகைப்படம் வைரலானதையடுத்து, தற்போது தன்னார்வ அமைப்பின் மூலம் திவ்யாவுக்கு அந்தப் பள்ளியில் அட்மிஷன் கிடைத்துவிட்டது.
திவ்யா, இனி வகுப்பறைக்கு வெளியில் நிற்க வேண்டாம். மீதமாகும் உணவுக்கான அவரது காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
மற்ற குழந்தைகளைப் போல் திவ்யா பள்ளியில் கல்வி கற்கப்போகிறார். அரசாங்கம் வழங்கும் மதிய உணவு இனி அவருக்கு தானாகக் கிடைக்கும்.
சிறுமிக்குத் தேவையான புத்தகம் மற்றும் சீருடைகளைப் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. சீருடைகளை அணிந்து சிறுமி பள்ளிக்குச் செல்லும் புகைப்படத்தை அந்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். ஒரு புகைப்படம் சிறுமியின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.