ஆழ்துளை குழாய்களில் உயிரிழப்புக்களை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு
09 Nov,2019
மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் குழந்தைகள் விழுந்து உயிரை இழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் மதுரையை சேர்ந்த அப்துக் ரசாக் குடை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை சுஜித் மூடப்படாத ஆழ்துளை குழாயில் தவறி விழுந்ததும் அவனை மீட்பதற்கு சுமார் 100 மணி நேரம் நடைபெற்ற அசுர முயற்சிகள் தோல்வியில் முடிந்ததும் மக்களை திகைப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.
தொடர்ந்து, அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு என பல்வேறு மரணச் செய்திகள் வெளியாகி வருகின்றன. குறுகிய துளைக்குள் விழுந்த இளந்தளிர்களின் உடலை முரட்டுத்தனமாகப்பற்றி, வெளியே தூக்குவது இயலாத காரியம் என்பதால், குழந்தைகளை உயிருடன் வெளியே எடுக்கும் காரியம் போதுமான உபகரணங்கள் இல்லாததால் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
இந்நிலையில், மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்டம், பீபீக்குளம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் குடை வடிவில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
செய்முறை விளக்கம்
ஆழ்துளை குழாய்க்குள் மூடப்பட்ட குடையாக தலைகீழாக செலுத்தப்படும் இந்த கருவி, அதில் விழுந்து கிடந்த ஒரு பொம்மையை சேதமேதுமின்றி வெளியே எடுக்கும் செயல்முறை விளக்கத்தை அப்துல் ரசாக் செய்து காட்டினார்.
தலைகீழாக உள்ளே செலுத்தப்படும் இந்த மெல்லிய குடைபோன்ற கருவி, உள்ளே இருக்கும் பொம்மையைகடந்து சென்ற பின்னர் பொத்தானை இயக்கி குடையை விரிப்பதுபோல் விரிவடையச் செய்ததும் சிக்கியிருந்த பொம்மை விரிந்த குடையின் மீது அமர்ந்தவாறு வெளியே வந்தடைகிறது.
இந்த கருவியின் பலனும் பலமும் அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் சிறப்பாக அமைய வாழ்த்தும் அதேவேளையில் இதை உருவாக்கியுள்ள மதுரை அப்துல் ரசாக், ஏற்கெனவே இதுபோல் மேலும் பல கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.