இரட்டிப்பாக்கித் தரும் இயந்திரம் தருவதாகக் கூறி மோசடி!
07 Nov,2019
ஐதராபாத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பு செய்து தரும் இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி கஜராவ் பூபால், பணத்தை இரட்டிப்பாக்கித் தரும் ரேடியோ ஆக்டிவ் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி திருப்பதிக்கு வியாபாரிகளை வரவழைத்து 25 லட்சம் ரூபாய் வரை ஒரு கும்பல் பணம் பறித்து மோசடி செய்து வந்ததாக கூறினார்.
வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தி, மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாகக் கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவர்களை பின்னணியில் இருந்து இயக்கும் முக்கிய நபர்களைத் தேடி வருவதாகக் கூறினார். தற்போது பிடிபட்டுள்ள நபர்களிடம் இருந்து 59 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.