டெல்லியில் குடும்பத்துடன் போலீஸார் போராட்டம்"
06 Nov,2019
போலீஸாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான போலீஸார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங் களை நிறுத்துவது தொடர்பாக போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி வழக்கறிஞர்கள் நீதிமன்ற போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்த பர பரப்பு அடங்கும் முன் நேற்று முன் தினம் டெல்லியில் சாகேட் நீதிமன்ற வளாகத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த போலீஸ்காரர் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கினர்.
இந்நிலையில், போலீஸாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று கோரி டெல்லியில் போலீஸ் தலைமையகம் முன் நேற்று ஆயிரக்கணக்கான போலீஸார் சீருடையுடன் கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸாரின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். இதனால், அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட போலீஸாரிடையே பேசிய டெல்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், ''இது போலீஸாருக்கு சோதனையான காலம். கட்டுப்பாடு மிக்க படையாக நாம் செயல்பட வேண்டும். சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அரசும் மக்களும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். போலீஸார் பணிக்குத் திரும்ப வேண்டும்'' என்றார். நாட்டில் இதுவரை போலீஸார் போராட்டம் நடத்தாத நிலையில், இந்தப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சனிக்கிழமையன்று போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனிக் கிழமை நடந்த மோதல் பற்றியும் அதற்கான சூழல் பற்றியும் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா பல்வேறு பார் கவுன்சில்களுக்கும் நேற்று எழுதிய கடிதத்தில், ''நீதிமன்ற புறக் கணிப்பை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும். ரவுடித்தனத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்கள் பற்றிய விவரங் களை நாளைக்குள் இந்திய பார் கவுன்சில் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சாகேட் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ்காரர் தாக்கப்பட்டது தொடர்பாகவும் மேலும் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கியது தொடர்பாகவும் சாகேட் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்த போலீஸாருக்கு தலா ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் சிறப்பு ஆணையர் சதீஷ் கோல்ச்சா அறிவித்தார். மேலும், போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். உயர் போலீஸ் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று 11 மணி நேரப் போராட்டத்தை போலீஸார் கைவிட்டனர்.
கடந்த சனிக்கிழமையன்று நடந்த மோதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வழக்கறிஞர் களைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், நிலைமைகளைச் சீராக்கும் முயற்சியில் மத்திய உள் துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. வழக்கறிஞர்களைக் கைது செய்யத் தடை விதித்த உத்தரவு குறித்து உயர் நீதிமன்றத்திடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
இதனிடையே, துணைநிலை ஆளுநர் அனில் பைஜலை டெல்லி போலீஸ் புலனாய்வு பிரிவு சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் சந்தித்து நிலைமைகளை விளக்கினார். போலீஸாரும் வழக்கறிஞர்களும் இணக்க மாக செயல்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமில்லாமல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஆளுநர் அனில் பைஜல் வலியுறுத்தியிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.