ஆழ்துளை கிணற்றில் குழந்தை பலி: ஹரியாணாவில் ஒரு சம்பவம்
04 Nov,2019
ஹரியாணா மாநிலத்தில் பெண் குழந்தை ஒன்று 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது.
ஐந்து வயது ஷிவானி ஞாயிற்றுகிழமை மதியம் காணாமல் போயுள்ளார். ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு அவர் வீட்டின் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார் என அவரின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. உடனே கிராம மக்கள் காவல்துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
அவர்கள் உடனே மீட்புப் பணியைத் தொடக்கினர். பிறகு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் வந்துள்ளனர்.
ஆழ் துளைக்குள் சிக்கிக்கொண்ட குழந்தைக்கு ஒரு குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. குழந்தையை கேமரா மூலமாக மீட்புக்குழு பார்த்தபோது அதன் கால் மட்டும் தெரிந்துள்ளது. குழந்தை உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கையில் அதன் பெற்றோர் குரலையும் உள்ளே அனுப்பி ஒலிக்க வைத்ததாக அந்த பகுதி காவல் அதிகாரி கூறினார்.
ஆனாலும் குழந்தையிடம் எந்த அசைவும் காணவில்லை என்று தெரியவந்தது. அக் குழந்தை தலை கீழாக விழுந்ததும் பிறகு தெரியவந்தது. 18 மணி நேரத்திற்கு பிறகு, திங்கள் கிழமை காலை, அந்த குழந்தை தேசிய பேரிடர் மீட்புக் குழு வீரர்களால் மீட்கப்பட்டது. மருத்துவமனை கொண்டு சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு 82 மணி நேரம் போராடிய பிறகு, குழந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இது நடந்து சில நாள்களில் ஹரியாணாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.