சவுதி அரேபியாவில் ரூபே கார்டுகள் அறிமுகம்: இந்தியா-சவுதி புரிந்துணர்வு ஒப்பந்தம்
30 Oct,2019
சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று முன்தினம் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சுற்றுப்பயணத்தின்போது, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தை மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். எரிசக்தி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, என பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபே கார்டு என்பது ஏடிஎம்கள், பிஓஎஸ் சாதனங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் வகையான இந்திய உள்நாட்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு கட்டண நெட்வொர்க் ஆகும். இது 2012 இல் தொடங்கப்பட்டது.
இந்தியா ஏற்கனவே ரூபே கார்டுகளை ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சிங்கப்பூர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூபே கார்டுகளை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. இது இந்தியாவின் மாஸ்டர் கார்டு மற்றும் விசாவின் பதிப்பாகும். தற்போது இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான ரூபே கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.
சவுதி அரேபியாவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஹஜ் யாத்ரீகர்கள் மற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட உம்ரா யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவுக்கு வருகை தருகிறார்கள், ரூபே அட்டையை அறிமுகப்படுத்துவதால் குறைவான விலையில் பரிவர்த்தனை செய்ய முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சவுதி இடையேயான இருதரப்பு உறவுகள் எரிசக்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ரியாத்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் இருதரப்பு உறவுகளை ஒரு புதிய பாதையில் கொண்டு சென்றது