சுர்ஜித்தை மீட்பதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு குழந்தையை பலியாக விட்ட பெற்றோர்!
29 Oct,2019
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பான செய்தியை பெற்றோர் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் 2 வயது பெண் குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்- நிஷா தம்பதிக்கு 2 வயதில் ரேவதி சஞ்சனா என்ற குழந்தை உள்ளது.
மீனவரான லிங்கேஷ்வரன் தனது மனைவியுடன் நேற்று (28) மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தனது குழந்தை காணாமல் போகவே அக்கம் பக்கத்தில் தேடிய நிலையில், பின்னர் தனது வீட்டின் கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது