அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 40 விசைப்படகுகள் மாயம்!
                  
                     26 Oct,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 40 விசைப்படகுகளின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
	குமரி மாவட்டத்தில் மேல்மிடாலம் முதல் நீரோடி வரையிலான கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 40 நாட்கள் வரை தங்கி மீன்பிடிப்பது வழக்கம். அதன்படி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள், கோவா கடல்பகுதியில் வீசி வரும் சூறைக்காற்று புயலாக மாறலாம் என்ற அறிவிப்பு வெளியானதால் கரைக்கு திரும்பினர்.
	சுமார் 800 விசைப்படகுகள் கரைதிரும்பிய நிலையில், 40 விசைப்படகுகளின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் சூறைக்காற்றில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், இந்திய கடற்படையினர் அவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே சில படகுகள் கரைதிரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
	இதனிடையே மாயமான 40 விசைப்படகுகளில், 2 படகுகளை சேர்ந்த மீனவர்கள் கோவா கடல் பகுதியில் தத்தளிக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. படகிலுள்ள மீனவர்கள் இந்தக் காட்சிகளை படம்பிடித்து அனுப்பி, தங்களை மீட்குமாறு உதவி கோரியுள்ளனர்.