கல்கி பகவானுக்குச் சொந்தமான இடங்களில் 409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், கணக்கில் வராத ரூபா 93 கோடி பணம் பறிமுதல்
23 Oct,2019
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தச் சோதனை 6 நாட்களுக்குப் பிறகு நேற்று திங்கட்கிழமை முடிவுக்குவந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார்.
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்திவரும் இவருக்கு சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன. பிரமாண்ட மாளிகையில் ஆசிரமம், முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், பெங்களூரில் மிகப்பெரிய தொழில் நிறுவனம், உலக நாடுகளில் ஆசிரமங்கள் என கல்கி பகவான் நடத்திவந்த நிறுவனங்களில் கடந்த 16-ம் திகதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.
ஸ்ரீபகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்களில், பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்தச் சோதனை 6 நாட்களுக்குப் பிறகு நேற்று திங்கட்கிழமை முடிவுக்குவந்துள்ளது.
சோதனைகளில் சிக்கியவற்றைப் பற்றி வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்திவந்த வையிட் லோட்டஸ் குழு நிறுவனத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூபா 409 கோடி மதிப்புள்ள ரசீதுகள், வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூபா 93 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள்
26 கோடி மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி மதிப்புள்ள 1,271 கெரட் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு கரன்சிகள் 2.5 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 18 கோடி), தமிழகம், ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் நிலங்களில் முதலீடுகள் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூபா 85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டி வருவாயாக வந்த ரூபா 90 கோடி மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கல்கி பகவான், அம்மா பகவானுடன் மகன் கிருஷ்ணா
இந்தச் சோதனையில் கல்கியின் பல்வேறு ஆசிரமங்களில் நன்கொடைகளை மறைத்ததற்கான ஆதாரங்களும், ஊழியர்களின் மூலம் பண வசூல் நடத்தியதும்,
சொத்துகளை நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளுக்கு மேல் விற்று கறுப்பு பணம் பதுக்கி வைத்திருந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.