ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் ஏசியா விமானம்!
21 Oct,2019
ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக, திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 115 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் ஏசியா விமானம் நேற்று மாலை திருச்சி புறப்பட்டது. வரும் வழியில், திருவாரூரைச் சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படவே, விமானத்தில் இருந்த சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
10 மணி அளவில், திருச்சியில் அந்த விமானம் தரை இறங்கியது. இதை அடுத்து முத்துவேலுவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்துவேலுவுக்கு பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் காலியான நிலையில், 10.30 மணிக்கு அந்த விமானம் மீண்டும் மலேசியா புறப்படத் தயாரானது.
ஆனால் மாற்று சிலிண்டருக்கு ஏற்பாடு செய்யாத காரணத்தால் அந்த விமானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானத்தில் செல்ல காத்திருந்த 50 பயணிகள் நள்ளிரவு 12 மணிக்கும், எஞ்சிய 65 பயணிகள் இன்று காலை புறப்பட்ட விமானத்திலும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு விமானத்திலும் 7 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.