மெக்சிகோவால் நாடுகடத்தப்பட்ட 325 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்!
19 Oct,2019
மெக்சிகோ நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நாடுகடத்தப்பட்ட 325 இந்தியர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர்.
வாழ்வாதாரம் தேடி மெக்சிகோவில் இருந்து பல்வேறு மக்கள் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முற்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மெக்சிகோ அமெரிக்கா எல்லைப்பகுதிகள் வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை டிரம்ப் அரசு சிறையில் அடைத்து வந்தது. மேலும் அடைக்கலம் தேடி வருபவர்களை எல்லைப்பகுதியிலேயே தடுத்து நிறுத்துமாறு குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.
மெக்சிகோவின் எல்லைகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் மக்கள் மீது மெக்சிகோ அரசு நடவடிக்கை எடுக்காவிடில், மெக்சிகோவின் அனைத்து இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் அதிகமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் மாதம் அச்சுறுத்தித்தினார்.
இதையடுத்து மெக்சிகோ குடியுரிமைத்துறை அதிகாரிகள் எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மெக்சிகோ நாட்டில், உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக மெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 325 இந்தியர்களை டோலுகா சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் போயிங் 747 விமானத்தின் மூலம் மெக்சிகோ அரசு டெல்லிக்கு திருப்பி அனுப்பியது.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் இன்று டெல்லி வந்தடைந்தனர். இலங்கை மற்றும் வங்காளதேசம் நாடுகளிலிருந்து சென்ற பலர் அங்கு தங்கியிருக்கும் நிலையில் இந்தியர்களை மட்டும் நாடு கடத்தியது வேதனை அளிக்கிறது என திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு சென்று குடியேறலாம் என்று ஆசை காட்டிய ஏஜெண்ட் மூலமாக 18 லட்சம் ரூபாய் செலவழித்து காடுகளை கடந்து மெக்சிகோ சென்றடைந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.