சீக்கியப் போராளிகளை விடுவிப்பது போல் எங்களையும் விடுவியுங்கள் : ஏழு தமிழர்கள் சார்பாக கடிதம்!
19 Oct,2019
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் எழுவரின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் அவ்வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், “8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு.
அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சியின் ஒரே தேசம் ஒரே சட்டம் என்ற தேசத்தின் தர்க்கத்துக்கு முரணாக உள்ளது. கடந்த வருடம் குடியரசுத் தலைவரின் பெயரில் மத்திய அரசு எடுத்த முடிவை நினைவுகூர விரும்புகிறேன். 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, 18.04.2018 அன்று தமிழகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதற்கு முரணாக, பல்வேறு தீவிரவாத, தேசத்துரோக குற்றச்சாட்டில், பல்வேறு மாநிலங்களில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் 8 காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் விடுதலையைப் பற்றிய பஞ்சாப் அரசின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றது.
எங்கள் 7 பேரின் சட்டத்துக்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவு நியாயமற்ற முறையில் ஏதோ ஒரு வகையில் மத்திய அரசால் முடக்கப்படுகிறது.
நாங்கள் 7 தமிழர்களும் ஏற்கெனவே 28 வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம், இன்னும் கழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க ஆவண செய்து, இந்தியா முழுவதும் இருக்கும் கைதிகளுக்கு சமமான நீதி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கடிதம், 10 நாட்களுக்கு முன்பே சிறை கண்காணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டதாகவும், பரிசீலனைக்கு பிறகு சிறை நிர்வாகம் சார்பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.