கடன் பிரச்னை காரணமாக 2 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை
19 Oct,2019
கடன் பிரச்னை காரணமாக 2 சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான ஆரோவில்லைச் சேர்ந்த தம்பதி சுந்தரமூர்த்தி-மகேஸ்வரி. சுந்தரமூர்த்தி தனியார் பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், மகேஸ்வரி ஆரோவில் பகுதியில் உள்ள ஆரோ பவுண்டேஷன் என்ற நிறுவனத்தில் சத்துணவுப் பணியாளராக 20 வருடங்களாகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவருமே ஆரோவில்லியன் என்று அழைக்கப்படும் ஆரோவில்வாசிகள் என்பதால், ஆரோவில் நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்களின் மூத்த மகள் கிருத்திகா 12-ம் வகுப்பும், இளைய மகள் சமிக்ஷா 8-ம் வகுப்பும் படித்துவந்தனர்.
இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை முதல் மகேஸ்வரி வேலைக்குச் செல்லாததால் அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் நேற்று அவரது வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.
அப்போது அந்த வீடு உள்புறமாக தாழிடப்பட்டிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அதில் சந்தேகமடைந்த ஊழியர்கள் ஆரோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். உடனே விரைந்த காவலர்கள் அங்கிருந்த உறவினர்களுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது சுந்தரமூர்த்தி அங்கிருந்த மின் விசிறியில் புடவையைக் கட்டி தூக்குப் போட்டுக்கொண்டு அழுகிய சடலமாகத் தொங்கிய நிலையில், மகேஸ்வரி, கிருத்திகா, சமிக்ஷா மூவரும் படுக்கையறையில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், “ஏற்கெனவே கடனில் இருந்த சுந்தரமூர்த்தி-மகேஸ்வரி தம்பதி அதை எப்படியாவது அடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் தீபாவளி பரிசுச் சீட்டு பிடித்து வந்திருக்கின்றனர். ஆனால், அந்தப் பணத்தையும் கடனுக்காக செலவழித்துவிட்டிருக்கின்றனர்.
தீபாவளி நெருங்கியதால் பணம் கட்டியவர்கள் அதைக் கேட்கவே, தன் அம்மாவிடம் உதவி கேட்டிருக்கிறார் மகேஸ்வரி. ஆனால், அவர்களாலும் உதவி செய்ய முடியாத சூழலில் இருந்திருக்கிறார்கள். அதனால் மனமுடைந்து போனவர்கள் தற்கொலை முடிவெடுத்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தியைத் தவிர மற்ற மூன்று பேரும் உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பிரேதப் பரிசோதனை முடிந்ததும் மற்ற தகவல்கள் தெரியவரும். சுந்தரமூர்த்தியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றனர்