மேக் இன் இந்தியாவின் பெருமைஸசாரஸ் எம்கே 2 விமானம்!
17 Oct,2019
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுபவைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுவது சாரஸ் எம் கே 2 விமானம் ஆகும். இதுபற்றிய செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் நமக்குத் தேவையான பொருட்களை நாமே தயாரித்துக் கொள்ளும் மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மகுடமாகக் கருதப்படுவது சாரஸ் எம் கே 2 விமானத் தயாரிப்பாகும்.
முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாராகும் இந்த இலகு ரக பயணிகள் விமானம் இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகமும், என் ஏ எல் எனப்படும் தேசிய விண்வெளி ஆய்வகமும் இணந்து இந்த விமானத்தைத் தயாரித்து வருகின்றன. 19 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த விமானத்திற்கான இறுதிச் சான்றிதழ் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த விமானத்தை விமானப்படையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்களை அழைத்துச் செல்லுதல், அவசர காலங்களில் முக்கிய நபர்களை இடம் மாற்றுதல் உள்ளிட்ட பல்நோக்கு பயன்பாட்டிற்கு பயன்பட உள்ளது சாரஸ் எம் கே 2 விமானம்.
ஜெர்மனியின் டர்னியர் டோ 228, இந்தோனேஷியாவின் என் 219, அமெரிக்காவின் பீச்கிராஃப்ட் 1900 டி , செக் குடியரசின் எல்இடி 410 என்ஜி மற்றும் சீனாவின் ஹார்பின் ஒய் 12 ஃஎப் உள்ளிட்ட சமகால விமானங்களுடன் ஒப்பிடும் போது சாரஸ் விமானத்தின் செயல்திறன் மற்றும் இயக்கும் முறை ஆகியவை உலகளாவிய வகையில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சாரஸ் வகை விமானங்களை அடுத்த தலைமுறை விமானமாக மாற்றும் வகையில் அதன் இருக்கைகளை 70 முதல் 90 இருக்கை கொண்ட விமானமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை எளிதாக்கும் உடான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதால், சாரஸ் விமானம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.