மறு அளவீடு செய்யப்படுகின்றது இமயமலையின் உயரம்!
14 Oct,2019
உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் உயரத்தை மறு அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தீர்மானத்தை சீனாவும், நேபாளமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுகின்றன.
இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இமயமலையை பாதுகாக்கும் விதமாக நேபாளம் மற்றும் சீனா ஆகியன இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இதற்கமைய சகர்மதா மற்றும் ஸூமுலங்மா ஆகிய சிகரங்களில் அறிவியல் ரீதியிலான தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், நேபாளம், சீனா இடையிலான இமயமலைப் பரப்பளவின் எல்லைப் பகுதி சுருங்கியுள்ளது.
இதன்காரணமாக நேபாள அரசாங்கம் சார்பில் இமயமலையின் சிகரத்தை அளவிட குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 1954-ஆம் ஆண்டு இமயமலையின் சிகரம் 8,848 அடி என இந்தியாவினால் அளவிடப்பட்டதே தற்போது வரை அதிகாரப்பூர்வ அளவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும், 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வுக்குப் பின்னர் இமயமலையின் அளவு குறைந்துவிட்டதாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.