கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியா. 50 ஆண்டு காலமே இந்த உலகில் அவர் வாழ்ந்தார். ‘ஹோலி பேமிலி’ என்ற திருச்சபையை அங்கு நிறுவினார். 12 ஆண்டுகளுக்குள் 3 புதிய கான்வென்டுகள், 2 விடுதிகள், ஒரு ஆய்வு இல்லம், ஒரு அனாதை இல்லம் ஆகியவற்றை ஏற்படுத்தி மக்கள் பணி ஆற்றினார்.
இவர் உருவாக்கிய ஹோலி பேமிலி திருச்சபையில் இப்போது 1,500-க்கும் மேற்பட்ட சகோதரிகள் கேரளாவிலும், வட இந்தியாவிலும், ஜெர்மனி, இத்தாலி, கானா ஆகிய வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.
50-வது வயதில், குழிக்கட்டுசேரி என்ற இடத்தில் 1926-ம் ஆண்டு, ஜூன் மாதம் 8-ந் தேதி மரணம் அடைந்தார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் புனிதராக அங்கீகரிக்கப்படுவதற்கு 2 அற்புதங்கள் செய்திருக்க வேண்டும். மரியம் திரேசியாவும் அப்படி 2 அற்புதங்கள் செய்திருப்பதாக வாடிகன் அங்கீகரித்தது.
கேரளாவில் 1956-ம் ஆண்டு பிறந்த மேத்யூ பெல்லிச்சேரி என்பவருக்கு கால்கள் வளைந்து நடக்க முடியாமல் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் மரியம் திரேசியாவின் உதவியை நாடி 33 நாட்கள் உபவாசம் (உண்ணாநோன்பு) இருந்து பிரார்த்தனை செய்தனர். இதன் காரணமாக அவரது கால்கள் நேராகி இயல்பாக நடந்தார். இது முதலாவது அற்புதம்.
இதற்காக மரியம் திரேசியாவுக்கு 2000-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி புனிதர் பட்டத்துக்கு முந்தைய முக்திப்பேறு வழங்கப்பட்டது.
உடல்நலமற்ற கிறிஸ்டோபர் என்ற குழந்தையின் நோய்க்கு மரியம் திரேசியா நிவாரணம் தேடித்தந்தார். இதை அற்புதமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்று அங்கீகரித்தார்.
மரியம் திரேசியா செய்த அற்புதங்களுக்காக அவருக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான விழா வாடிகன் நகரில் புனித பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மரியம் திரேசியா, இங்கிலாந்தை சேர்ந்த கார்டினல் ஜான்ஹென்றி நியூமேன், சுவிஸ் நாட்டை சேர்ந்த பெண் மார்க்கரெட் பேஸ், பிரேசில் கன்னியாஸ்திரி டல்சி லோப்ஸ், இத்தாலி கன்னியாஸ்திரி கியுசெபினா வன்னினி ஆகிய 5 பேருக்கும் ஒரே நேரத்தில் ‘புனிதர்’ பட்டம் வழங்கி போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு செய்தார்.
அப்போது அவர், ‘‘நமது புதிய புனிதர்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம்’’ என்றார்.
அப்போது அங்கு ‘புனிதர்’ பட்டம் பெற்ற 5 பேரின் உருவப்படங்கள் பெரிய அளவில் தொங்க விடப்பட்டிருந்தன. இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு துறை ராஜாங்க மந்திரி வி. முரளீதரன் கலந்து கொண்டார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்சும் விழாவில் பங்கேற்றார்.
கடந்த மாதம் 29-ந் தேதி ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, மரியம் திரேசியா பற்றி குறிப்பிட்டார்.
அப்போது அவர், ‘‘ மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமிதம். அவர் குறுகிய காலகட்டமாக 50 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்தபோது, மனித குலத்தின் நன்மைக்காக உழைத்தார். ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். அவர் என்ன பணியை மேற்கொண்டு, செய்து முடித்தாலும் அதை முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் செய்து முடித்தார்’’ என புகழாரம் சூட்டியது நினைவுகூரத்தக்கது.