பாகிஸ்தான் எல்லையில் 1000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் முகாம் – உளவுத்துறை
10 Oct,2019
மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவை பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் எல்லை பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், பதுங்கியிருப்பதாக, உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாலக்கோட் பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியனவற்றால், இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் பாகிஸ்தான் நாடு, எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், 20 பயங்கரவாத முகாம்களை ஏற்படுத்தியிருப்பாதகவும், உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.
எல்லையையொட்டி, பாகிஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 20 பயங்கரவாத முகாம்களில், ஒவ்வொன்றிலும், தலா 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.
இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், தற்போதைய மழைப்பொழிவு மற்றும் வரவிருக்கும் பனிக்காலத்தைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் எல்லையிலிருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.
இதையடுத்து, ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு படைகளும், மிகுந்த உஷார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில், 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை, தாக்குதல் நடத்துவதற்காக பதுங்கியிருப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் கூறியிருக்கிறார்