போதுமான குடிநீர் இருப்பு: ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட குடிநீர் நிறுத்தம்
09 Oct,2019
சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது.
சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டுக் குடிநீரைக் கொண்டு வர தமிழக முதல்வர் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இத்திட்டத்துக்காக 65 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், சென்னை நகர மக்களுக்குப் பருவமழை கைகொடுத்து வருவதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது.
இது மட்டுமின்றி கிருஷ்ணா நதிநீரும் சென்னைக்கு அனுப்பப்பட்டதால் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்தது.
இதைத்தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் தண்ணீர் எடுத்துச்செல்லும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்து அதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதன்படி, சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் இன்று காலையுடன் நிறைவடைந்தது.