ஜெயலலிதாவுக்கு சிறையில் வி.ஐ.பி.சிகிச்சை அளிக்கப்படவில்லை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை வேண்டும் சுப்பிரமணியன் சாமி
02 Oct,2014
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வி.ஜ.பி. சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மற்ற சாதாரண கைதிகளை போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் ஜெயில் உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சிறைத்துறை அதிகாரி ஜெய்சிம்ஹா கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி. சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் மற்ற சாதாரண கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனரோ அதைப்போலவே தான் ஜெயலலிதாவும் நடத்தப்படுகிறார். சிறையில் ஜெயலலிதா ஜெயில் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகவே நடந்து கொண்டார். டாக்டர்களின் பரிந்துரைப்படி இரும்பு கட்டிலை தவிர வேறெந்த வசதியையும் அவர் வேண்டும் என்றும் கேட்கவில்லை. சாதாரண கைதிகளுக்கு கூட தொலைக்காட்சி பெட்டி வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதைக்கூட ஜெயலலிதா கேட்கவில்லை. சிறையில் அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி பிரவுண் பிரெட், பால், பிஸ்கட்டுகள், பழங்கள் மற்றும் சப்பாத்திகளே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே. இதுதவிர படிப்பதற்கு நியூஸ்பேப்பர்களும் தரப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தல்
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை
தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி அவரது தரப்பில்
தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள்
நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை அடுத்து அங்கு மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் இழிவானது மற்றும் வெட்கக்கேடானது என்று சுப்பிரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசு தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேசவிரோத சக்திகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.