இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து நியூஸி. பிரதமர் நெகிழ்ச்சி
29 Apr,2026
நியூசிலாந்துக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு மாபெரும் வாய்ப்பு என்று அதன் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியில் கடந்த 27ம் தேதி கையெழுத்தானது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூஸிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும், இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்து நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவுடன் நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது ஒரு மிகச் சிறந்த செய்தி. நியூஸிலாந்துக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு மாபெரும் வாய்ப்பு இது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்தற்கான காரணம் மிகவும் எளிமையானது. இந்தியா இப்போது பூமியிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.
இந்தியாவில் 150 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் படிப்படியாக செல்வந்தர்களாக மாறி வருகிறார்கள். இதன் காரணமாக, நியூசிலாந்து போன்ற இடங்களில் இருந்து வரும் உயர்தரமான பொருட்கள் மற்றும் சேவையை அவர்கள் விரும்புகிறார்கள். அதோடு, மிக முக்கியமாக இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க உள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நிலையில் இருந்து நடுத்தர வருமானம் கொண்ட நிலைக்கு இந்தியா உயருவதால், நியூசிலாந்தின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். இப்படிப்பட்டச் சூழலில், இந்தியாவுடன் இணைந்து வளர்வதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு நியூஸிலாந்துக்கு உள்ளது.
இந்தியாவுக்குத் தேவைப்படும் பொருட்களில் சுமார் 95% பொருட்கள் நியூஸிலாந்தால் ஏற்றுமதி செய்ய முடியும். இதில், மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முதல் நாளில் இருந்தே 57% பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒப்பந்தக் காலம் செல்லச் செல்ல சுங்கவரி விலக்கு பெறும் பொருட்களின் சதவீதம் படிப்படியாக உயரும். இதன்மூலம் கூடுதல் செலவுகளை சந்திக்க வேண்டிய அவசியம் நியூஸிலாந்துக்கு இருக்காது.
உலக அரங்கில் நியூஸிலாந்து ஏற்றுமதியாளர்களை போட்டித்தன்மை மிக்கவர்களாக இது மாற்றும். வளர்ந்து வரும் இந்தியச் சந்தையில் உலகம் முழுவதிலும் இருந்து வரும் பொருட்களுடன் நம்மால் போட்டியிட முடியும்” என நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.