கொலம்பியாவின் நீர்யானைகள்: பராமரிக்க முன்வந்தார் இந்திய கோடீஸ்வரர் ஆனந்த் அம்பானி!
29 Apr,2026
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு வந்த நீர்யானைகளைப் பராமரிக்க இந்தியக் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
1993-இல் கொல்லப்பட்ட 'கொக்கைன் மன்னன்' பாப்லோ எஸ்கோபார், தனது ஆடம்பர பண்ணையில் வளர்ப்பதற்காக ஆபிரிக்காவிலிருந்து ஒரு ஜோடி நீர்யானைகளைக் கொண்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், அந்த நீர்யானைகள் கொலம்பியாவின் மக்டலேனா ஆற்றுப் பகுதிகளில் சுதந்திரமாகத் திரிய ஆரம்பித்தன.
தற்போது இவற்றின் எண்ணிக்கை 80-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஆபிரிக்காவுக்கு வெளியே காணப்படும் மிகப்பெரிய நீர்யானைக் கூட்டம் இதுவாகும்.
இவை அப்பகுதி மீன்பிடி சமூகங்களைத் தாக்குவதோடு, அந்த நாட்டுக்கே உரிய உள்நாட்டு விலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இதனால், இவற்றை சுட்டுக் கொல்ல கொலம்பிய அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்திருந்தது.
கொலம்பியாவின் இந்த இக்கட்டான சூழலில், ஆனந்த் அம்பானி தனது குஜராத் மாநிலத்திலுள்ள 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு இந்த நீர்யானைகளை அழைத்துச் செல்ல முன்வந்துள்ளார்.
"ஒவ்வொரு உயிரும் முக்கியமானது" என்ற அடிப்படையில், இந்த நீர்யானைகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்து ஆயுள் முழுவதும் பராமரிக்கத் தயாராக இருப்பதாக அம்பானியின் பூங்கா நிர்வாகம் கொலம்பிய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
ஜாம்நகரில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்குப் புகலிடமாக உள்ளது.
அம்பானியின் இந்தத் தாராள மனப்பான்மை பாராட்டப்பட்டாலும், சில காட்டுயிர் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் வெப்பமான காலநிலை நீர்யானைகளுக்குப் பொருந்துமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கொலம்பியா அரசாங்கம் அம்பானியின் இந்த விண்ணப்பம் தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக பதிலை வழங்கவில்லை. இருப்பினும், கொலம்பியாவிற்குப் பெரும் தலைவலியாக இருக்கும் இந்த "கொக்கைன் நீர்யானைகளுக்கு" இந்தியக் கோடீஸ்வரர் ஒரு தீர்வு சொல்ல முன்வந்துள்ளமை உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.