தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு
31 Jan,2026
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ உள்ளது. இந்த அருங்காட்சியகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோமாஸ்கந்தர் மற்றும் 16-ம் நூற்றாண்டு விஜயநகர காலத்தைச் சேர்ந்த சுந்தரர்-பரவை நாச்சியார் வெண்கல சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சிலைகள் குறித்து அருங்காட்சியகம் தீவிர ஆராய்ச்சி செய்தது. பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்தது.
அப்போது இந்தச் சிலைகள் தமிழகக் கோயில்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டு கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இரு நாட்டின் நட்புறவு அடிப்படையில், ஷிவா நடராஜர் சிலையை மட்டும் அருங்காட்சியகத்தில் நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து காட்சிப்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. அந்த சிலையை பற்றிய முழு விவரங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
தென் இந்தியாவின் வெண்கல வார்ப்பு திறன், கலை நுணுக்கம், புனிதம் போன்றவற்றின் எடுத்துக் காட்டாக இந்த சிலைகள் அமைந்துள்ளன. வழக்கமாக இந்த சிலைகள் கோயில் விழாவின் போது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.