சட்டவிரோதமாக போர்ச்சுக்கல் செல்ல முயன்ற இந்திய குடும்பம் கடத்தல்.. ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்..!
14 Dec,2025
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தை சேர்ந்த கிஸ்மத்சிங் சாவ்தா, அவரது மனைவி ஹீனாபென் மற்றும் மூன்று வயது மகள் தேவாம்ஷி ஆகியோர் லிபியாவில் கடத்தப்பட்டுள்ளனர். போர்த்துக்கல்லில் குடியேற முயன்றபோது, ஒரு ஏஜெண்டின் உதவியுடன் பயணித்த இவர்கள், லிபியாவின் பெங்காசி நகரில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
கடத்தல்காரர்கள் இந்க் குடும்பத்தை விடுவிக்கக் கோரி, சுமார் ரூபாய் 2 கோடி பிணைத்தொகை கேட்டு மிரட்டி வருவதாக மெஹ்சானா காவல்துறை கண்காணிப்பாளர் ஹிமான்ஷு சோலங்கி தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் இந்தியர்கள் அல்ல என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 29 அன்று அஹமதாபாத்தில் இருந்து துபாய் வழியாக லிபியாவின் பெங்காசிக்கு இந்த குடும்பம் சென்றது. கடத்தல்காரர்கள் மெஹ்சானாவில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு பிணைத்தொகை கேட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகியதை தொடர்ந்து, இந்த விவகாரம் மாநில அரசுக்கும் மத்திய வெளியுறவுத் துறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ.வும் இது குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளார்.
போர்ச்சுகல்லுக்குச் சட்டவிரோதமாக குடியேற முயன்றபோது நடந்த இந்த சம்பவம், சட்டவிரோத குடிவரவின் ஆபத்துகளை மீண்டும் எடுத்துரைக்கிறது. மத்திய வெளியுறவுத் துறை இந்த குடும்பத்தை மீட்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.