அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு
05 Dec,2025
அமெரிக்காவில் பணியாற்றச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி மற்றும் எச்-4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை மறைத்த நிலையில் வைக்காமல், பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியவாறு “பப்ளிக்” ஒப்ஷனை தெரிவுசெய்து, பொதுவில் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அண்மையில் ஆப்கானிஸ்தான், மியன்மார், ஈரான் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு நிரந்தர தடை விதித்தார்.
அத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் பல்வேறு பணிகளுக்காக எடுக்கின்ற வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களின் வேலை பறிக்கப்படுவதாகவும் கூறி சமீப காலமாக டொனால்ட் ட்ரம்ப் விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் தீவிர கண்காணிக்கப்பட்டே விசா வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் பணியாற்றச் செல்வோருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
எச்-1பி விசா விண்ணப்பதாரர்கள், அவர்கள் அழைத்துச் செல்லும் கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக பெறும் எச்.4 விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளை மறைக்காமல், பொதுவில் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள பதிவுகள் அனைத்தும் எதிர்வரும் 15ஆம் திகதி ஆய்வு செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய விசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காணவே இந்த சமூக வலைத்தள ஆய்வு முறையை பயன்படுத்துவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.