இந்தியாவில் 9 மாநிலங்கள் மட்டுமே, சுமார் 74% சதவிகித ஹெச்.ஐ.வி. நோயாளிகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு இப்பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது?
2024-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, உலகளவில் ஹெச்.ஐ.வி பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. இருப்பினும் வருடாந்திர சராசரியிலோ, உயிரிழப்பு எண்ணிக்கையிலோ உயர்வு இல்லை என மத்திய அரசு தரவுகள் தெரிவித்துள்ளன.
டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தையொட்டி, இந்தியாவில் எத்தனை ஹெச்.ஐ.வி நோயாளிகள் உள்ளனர் என்பதுபற்றிய தரவுகள் வெளியாகின. 2024-ம் ஆண்டை மையப்படுத்திய இந்த தரவுகளில், பல புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன.
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்ட அந்த தரவுகளின்படி, ஒவ்வொரு வருடமும் வரும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை சராசரியாக 48.7 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல இறப்பு விகிதம் 2010-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2024-ல் 81.4% குறைந்துள்ளது. குறிப்பாக தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் ஹெச்.ஐ.வி பாதிப்பு குறைந்துள்ளது.
புதிதாக நோய்த்தாக்கம் ஏற்பட்டவர்களில் 73% பேருக்கு வேற்று பாலினத்தவர் உடனான பாலியல் உறவு மூலமாகவும், 11.5% பேருக்கு போதை ஊசி மூலமாகவும், 5.4% பேருக்கு தன்பாலினத்தவர் உடனான பாலியல் உறவு மூலமாகவும், 3.5% பேருக்கு கர்ப்ப காலத்தின்போதோ பிரசவத்தின்போதோ தாய்ப்பால் மூலமாகவோ பரவியுள்ளது தரவுகளின் வழியே தெரியவருகிறது.
இந்தியாவிலுள்ள ஹெச்.ஐ.வி நோயாளிகள் 25.61 லட்சம் பேரில் 13.97 லட்சம் பேர் ஆண்கள், 11.64 லட்சம் பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ள நிலையில், மாநில வாரியாக எங்கு எத்தனை பேர் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி ஹெச்.ஐ.வி நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடத்திலுள்ள மாநிலம் மகாராஷ்ட்ரா (3.99 லட்சம்). அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா (3.10 லட்சம் நோயாளிகள்), கர்நாடகா (2.91 லட்சம் நோயாளிகள்) உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் உ.பி, தமிழ்நாடு, தெலங்கானா, பீகார், குஜராத், பஞ்சாப் போன்றவை உள்ளன. இந்த 9 மாநிலங்கள் மட்டுமே, சுமார் 74% சதவிகித நோயாளிகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு இப்பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.
உலகளவில் இந்தியாவுக்கு முன்னதாக உள்ள நாடு, தென்னாப்பிரிக்கா. அங்கு மொத்தம் 78 லட்ச நோயாளிகள் வாழ்கின்றனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 25.61 லட்சம் என்று உள்ளது. தென்னாப்பிரிக்காவில் பாதிப்பு அதிகம் இருக்க, மக்கள்தொகை காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் ஹெச்.ஐ.வி. நோயாளிகள் எண்ணிக்கை, இறப்பு விகிதம் போன்றவற்றில் சரிவே ஏற்பட்டுள்ளது என்பதால் அது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
.
அரசின் விழிப்புணர்வு முன்னெடுப்புகள், எளியோருக்கும் சிகிச்சை கிடைக்கும் வசதிகள் போன்றவையே இவற்றுக்குக் காரணங்களாக பார்க்கப்படுகின்றன.